தமிழக பா.ஜனதா சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னைக்கு வந்துள்ளார். அவர் தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சட்டமன்றத் தேர்தல் பணிகள், கள நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், கோவையில் பா.ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“இன்றைய பேச்சுவார்த்தையில் சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பெற்றோம், வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதையே விவாதித்தோம். தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் குறித்தும் பேசப்படவில்லை. அதேபோல், நடிகர் விஜய் குறித்தும் எந்த விவாதமும் இடம்பெறவில்லை. தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பது காலப்போக்கில் தெரிய வரும்.
மேலும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அரசியல் நிலவரம் குறித்தே பேசினோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். ஒத்த கருத்துடைய அனைவரும் எங்கள் கூட்டணியில் இணைய வேண்டும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதுபோல், தமிழகத்தில் நல்ல ஆட்சி உருவாகும்,” என்றார்.
