சென்னை புரசைவாக்கத்தில், அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைவதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
“தொண்டர்களுக்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சிதான் அ.தி.மு.க. ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சி அந்த நிலைமையில் இல்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பதுபோல், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வில் ஒன்றிணைவோம் என்ற வைத்திலிங்கம் கருத்தை நான் முழுமையாக வழிமொழிகிறேன். எடப்பாடி பழனிசாமி உள்ள அணியில் இருப்பதே வெட்கக்கேடான விஷயம். இன்றைக்கு கட்சி எந்த நிலையில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது.
7 மக்களவை தொகுதிகள் என்றால், 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சமம். பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 11 தேர்தல்களில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் கட்சியை பாதாளத்திற்குத் தள்ளிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது.
தனது ஆதரவாளர்களை மட்டும் கூட்டி வைத்து, போலியான பொதுக்குழுவை உருவாக்கி, ‘ஒற்றைத் தலைமை வேண்டும்’, ‘பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்தி வருகிறார்’, ‘அவர் முதல்வராக இருந்தால் அனைத்து தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி கிடைக்கும்’ என்று கூறி, கட்சிக்குள் ஒரு பெரிய மாயையை அவர் உருவாக்கினார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்,” என்றார்.
