ராஜஸ்தானில் புதிதாக திருமணமான பெண் ஒருவருக்கு தாந்த்ரீக சடங்கு என்ற பெயரில் இழைக்கப்பட்ட கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் திருமணமான இந்தப் பெண்ணின் வீட்டிற்கு, மாமியார் தரப்பு உறவினர் ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். தான் ஒரு தாந்த்ரீகர் என்றும், பேய்களை விரட்டுவதாகவும் கூறி வந்த அவர், அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

செப்டம்பர் மாதம் வீட்டில் மற்ற பெண்கள் இருந்தபோதே, ஒரு அறையில் பெண்ணைப் பூட்டி வைத்து அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், அவர் எதிர்த்தபோது அவரைத் தாக்கியும் உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரின் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டார்.

இந்தக் கொடூர சம்பவம் குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை  அணுகி முறையிட்டார்.

அவரது அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்தத் தாந்த்ரீகர் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த இரண்டு பெண்கள் என மொத்தம் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.