தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி அருகே உள்ள ஒரு சந்திப்பில், அதிவேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், அங்கிருந்த கடை ஒன்றின் எல்லைச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளன.
WATCH | Lorry overturns at Vikarabad intersection due to overspeeding; young girl narrowly escapes pic.twitter.com/2ICFvtWeJW
— TIMES NOW (@TimesNow) December 22, 2025
அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி மீது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரி வளைவில் திரும்பும்போது திடீரெனத் தலைகீழாகக் கவிழ்ந்ததில் பக்கத்துச் சுவர் பெயர்ந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிறுமி சிக்கியதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் நொடிப் பொழுதில் ஓடிச் சென்று பெரும் போராட்டத்திற்குப் பிறகு சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அந்தச் சிறுமி எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார். விபத்து நடந்தவுடன் அங்கிருந்த இளைஞர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டுச் சிறுமியை இடிபாடுகளுக்குக் கீழிருந்து வெளியே எடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞரின் வீரத்தைப் பாராட்டி வரும் அதே வேளையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளைக் கட்டுப்படுத்தத் தவறிய போக்குவரத்துப் போலீசாரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும், பகல் நேரங்களில் இத்தகைய கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்றும், கவனக்குறைவாக லாரியை இயக்கிய ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
