மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதிதான் பொதுமக்களுக்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சேவை தொடங்கி மூன்றே நாட்களான நிலையில், ஒரு இளம்பெண் மெட்ரோ ரயிலுக்குள் ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மற்ற பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல், ரயிலின் நுழைவு வாயில் அருகே நின்று அந்தப் பெண் நடனமாட, அவரது நண்பர்கள் அதை வீடியோ எடுத்துள்ளனர். “டெல்லி மெட்ரோவில் நடக்கும் கூத்துகள் இனி போபாலிலும் அரங்கேறும்” என்று சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

​ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவிலும் இதேபோல் மெட்ரோவில் ரீல்ஸ் எடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தினர். இப்போது போபாலிலும் இது தொடர்வது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மெட்ரோவில் ரீல்ஸ் எடுக்கத் தடை விதிக்கப்பட்டது போல, மற்ற நகரங்களிலும் கடும் விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், “ரயில் பயணிகளுக்கா அல்லது ரீல்ஸ் எடுப்பவர்களுக்கா?” என்று அதிகாரிகளை டேக் (Tag) செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.