நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிறை’ திரைப்படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தை, இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
எல்.கே. அக்ஷய் குமார் மற்றும் அனந்தா ஆகியோர் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் பேசிய தயாரிப்பாளர் லலித் குமார், தனது வளர்ச்சிக்கு நடிகர் விஜய் தான் முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் கொடுத்த ‘மாஸ்டர்’ படம் தான் தனது நிறுவனத்திற்குப் பெரிய அடையாளத்தைத் தந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே ‘லியோ’ பட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார். இதற்காகத் தான் எப்போதும் தளபதி விஜய்க்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக லலித் குமார் மேடையில் பேசினார்.
