இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (டிசம்பர் 21) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயித்த 122 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி திறம்பட விளையாடி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், அவர் ஒரு வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் 18 ரன்களைத் தொட்டபோது, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஸ்மிருதியின் இந்த அசுர வளர்ச்சி மற்றும் இந்திய அணியின் தொடக்க வெற்றி ஆகியவை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
