உலகளவில் பெயர் பெற்ற நாடுகளில் ஜப்பான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்நாட்டில் ரயில்கள், பூங்காக்கள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்கள் மிகுந்த சுத்தத்துடன் பராமரிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, சாலைகளில் குப்பைகள், பயணிகள் அலட்சியமாக கழிவுகளை கொட்டுவது போன்ற காரணங்களால் இந்தியா அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொல்கத்தாவில் செயல்படும் ஒரு வயதான தெரு உணவு விற்பனையாளரை குறித்து ஜப்பானைச் சேர்ந்த சமூக ஊடக படைப்பாளர் ஒருவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. X சமூக வலைதளத்தில் @MyColleagueMio2 என்ற கணக்கின் மூலம் அந்த ஜப்பானிய படைப்பாளர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்,
“இந்த சுகாதாரத்தை உங்கள் வயிறு சமாளிக்குமா? கொல்கத்தா தெருவில் ஒரு முதியவர் முட்டை டோஸ்ட் தயாரிக்கிறார். ஒரு ஜப்பானியராக இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.

வைரலான அந்த காணொளியில், வயதான தெரு வியாபாரி ஒருவர் டோஸ்ட்டை நறுக்கி, பாரம்பரிய சுல்ஹாவில் வறுத்தெடுப்பது பதிவாகியுள்ளது. கையுறைகள் இன்றி முட்டையை உடைத்து ஆம்லெட் தயாரிப்பதும், சுல்ஹாவை விசிறி விடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. உணவு தயாரிக்கப்படும் இடத்தின் சுற்றுப்புறம் சுத்தமில்லாமல் இருப்பதும் காணப்படுகிறது.

 

 

இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பயனர்கள் இந்திய தெரு உணவின் சுகாதார நிலையை கேலி செய்துள்ளனர். அதே நேரத்தில், அந்த முதிய வியாபாரியின் கடின உழைப்பை சிலர் பாராட்டியுள்ளனர். ஒரு பயனர், உணவு சுவையாகவோ சுத்தமாகவோ தெரியவில்லை. ஆனால் அவர் கடின உழைப்பாளி என்பதால் நான் அதை சாப்பிடுவேன். எனக்கு வலுவான வயிறு இருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், “சராசரி இந்தியர்களின் வயிறு இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் நாமெல்லாம் வைட்டமின் மாத்திரைகளில் தான் உயிர் வாழ வேண்டியிருக்கும்” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், “இந்தியர்களைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அவர்களிடம் அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது” என்று பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம், இந்திய தெரு உணவின் சுகாதார நிலை குறித்து மீண்டும் ஒரு முறை விவாதத்தை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரம், அவர்களின் சூழல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.