சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று (டிசம்பர் 20) ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை என்பது அன்பு, அமைதி, மன்னிப்பு மற்றும் கருணை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த பாடம் என்று குறிப்பிட்டார். மனிதநேயத்துடன் மக்கள் பணியாற்றுபவர்களைத் தெய்வமாக மதிக்கும் உயரிய பண்பு நம்மிடம் உள்ளதாகப் பாராட்டிய அவர், கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் அவரது போதனைகளைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, மகாத்மா காந்தியடிகள் இயேசு கிறிஸ்துவின் ‘மலைப்பிரசங்கத்தால்’ பெரிதும் ஈர்க்கப்பட்டார் என்ற தகவலை ஆளுநர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். காந்தியின் அகிம்சை மற்றும் வாழ்வியல் முறைகளில் இயேசுவின் போதனைகள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசிய அவர், இதுபோன்ற புனிதமான போதனைகள் இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.
