ஹரியானா மாநிலம் மாநேசரில் மாற்று மத இளைஞரைக் காதலித்த 19 வயது இளம்பெண்ணை, அவரது அண்ணனே நண்பருடன் சேர்ந்து ஆணவக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் அபிஷேக், தனது தங்கை வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலிப்பதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
தங்கையைச் சொந்த ஊருக்கு அனுப்பிய போதிலும், அவர் மீண்டும் மாநேசருக்கே வந்து காதலனுடன் வாழத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணன், தனது நண்பர் உதவியுடன் தங்கையைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். நண்பர் மூலமாகத் தங்கையை ஏமாற்றித் தனியான இடத்திற்கு வரவழைத்து, அங்கு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, போலீசாரைத் திசைதிருப்ப முயன்ற அண்ணன், தனது தங்கையின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், குற்றப்பிரிவு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அண்ணன் மற்றும் அவரது நண்பரின் நடமாட்டங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. இறுதியில் நடத்தப்பட்ட விசாரணையில், கௌரவத்திற்காகத் தங்கையைக் கொன்றதை அண்ணன் ஒப்புக்கொண்டார்.
தப்பியோடிய அவரது நண்பரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கொலைக்கு முன்னதாக இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அடுத்தகட்ட ஆதாரங்களைத் திரட்டும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
