கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கொல்கத்தா வருகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு நிதி மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதன் முக்கிய ஏற்பாட்டாளரான சதத்ரு தத்தாவின் இல்லத்தில் கொல்கத்தா போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ஒரு நபருக்கு 10 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகவும், இதற்கான முறையான ஆவணங்கள் ஏதும் பராமரிக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ராவில் உள்ள சதத்ரு தத்தாவின் ஆடம்பரமான மூன்று அடுக்கு மாடி வீட்டில் ஐந்து அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பல மணிநேரம் சோதனையிட்டனர். அந்த வீட்டில் நீச்சல் குளம், மொட்டை மாடியில் கால்பந்து மைதானம் மற்றும் பிரம்மாண்ட அலுவலகம் போன்ற வசதிகள் கண்டறியப்பட்ட நிலையில், இவை சட்டவிரோத பணத்தின் மூலம் உருவாக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த மெகா நிகழ்ச்சிக்காக மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாயும், வரித் தொகையாக 11 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாகச் சதத்ரு தத்தா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும், 66,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்பட்டதாகவும், மீதமுள்ளவை இலவசமாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதை போலீசார் நம்ப மறுக்கின்றனர்.
டிக்கெட் விற்பனை, விஐபி பாஸ்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் கணக்கில் காட்டப்படவில்லை எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே சதத்ரு தத்தாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரது வங்கி கணக்கில் இருந்த 22 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
செல்வாக்கு மிக்க நபர்களின் நெருக்கடியாலேயே மைதானத்திற்குள் கூடுதல் நபர்கள் அனுமதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
