பிரான்ஸ் நாட்டின் பெசான்கான் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மயக்க மருந்து நிபுணராகப் பணியாற்றிய டாக்டர் பிரடெரிக் பெஷியர் (வயது 53), அறுவை சிகிச்சையின் போது 12 நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர்களைக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008 முதல் 2017-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 4 வயது சிறுவன் முதல் 89 வயது முதியவர் வரை சுமார் 30 பேரின் மயக்க மருந்துப் பைகளில் பொட்டாசியம் குளோரைடு உள்ளிட்ட ஆபத்தான வேதிப்பொருட்களைக் கலந்து மாரடைப்பை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சக மருத்துவர்களை விடத் தான் திறமையானவர் என்பதைக் காட்டிக்கொள்ளவும், நெருக்கடியான நேரங்களில் நோயாளிகளைக் காப்பாற்றி ஒரு கதாநாயகனாகத் திகழ வேண்டும் என்ற வக்கிரமான எண்ணத்தினாலுமே அவர் இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டதாகப் புலனாய்வில் தெரியவந்தது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்தத் தீவிர விசாரணையின் முடிவில், கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில் 30 விஷ ஊசி வழக்குகளில் 12 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரடெரிக் பெஷியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், அவர் குறைந்தது 22 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும், மருத்துவத் தொழில் செய்ய அவருக்கு நிரந்தரத் தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இவரை “பிரான்ஸ் சட்ட வரலாற்றின் மிகப்பெரிய குற்றவாளிகளில் ஒருவர்” என்று சாடினர்.

“நான் ஒரு விஷம் வைப்பவன் அல்ல” என்று பெஷியர் நீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், அனைத்துச் சாட்சியங்களும் அவருக்கு எதிராக இருந்ததால் இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் உலக மருத்துவ சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.