திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 42 வயது விதவை பெண் ஒருவரும், அவரது 18 வயது இளைய மகளும் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணின் கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இளைய மகள் 18 வயதை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான கந்தன் (31) என்பவருக்கும், அந்த 42 வயது பெண்ணுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13-ஆம் தேதி இரவு, தாய் மற்றும் இளைய மகள் இருவரும் வீட்டிலிருந்து மாயமானதைத் தொடர்ந்து, மூத்த மகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் செல்போன் தகவல்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் கேரளாவுக்கு சென்று கண்காணிப்பு மேற்கொண்டதில், ஒரு தேயிலைத் தோட்டத்தில் தாய், மகள் மற்றும் கந்தன் ஆகியோர் இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், இளம்பெண், தன்னை வாயில் துணி வைத்து தாயுடன் சேர்ந்து கந்தன் கடத்திச் சென்றதாகவும், பின்னர் கட்டாயமாக தாலி கட்டி வைத்து பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்தார். இந்தச் செயலில் தாயும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, ஆள் கடத்தல், கட்டாய திருமணம், பலாத்காரம், பெண்ணுக்கு எதிரான கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கந்தன் மற்றும் இளம்பெண்ணின் தாயை காவல் துறையினர் கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் அவரது மூத்த சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் மகளையே தாய் கடத்தி, கள்ளக்காதலனுக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
