உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் – வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ‘சம்ராட் தாபா’ என்ற உணவகத்தில், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட தயிர் வடை தட்டில் செத்த எலி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவைச் சாப்பிடத் தொடங்கிய வாடிக்கையாளர், தயிரைக் கிளறிய போது உள்ளே செத்த எலி ஒன்று முழுமையாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கண்டனங்களை எழுப்பியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சமையலறை மிகவும் அசுத்தமாகவும், உணவுகள் பாதுகாப்பற்ற முறையிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததோடு, மறு உத்தரவு வரும் வரை அங்கு உணவுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளனர்.