மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்து, அதன் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வரும் 24.12.2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியைத் திணிப்பது மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தையே முடக்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பாஜக அரசின் சதிச் செயலையும், அதற்குத் துணையாக இருக்கும் அதிமுகவையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
சென்னையிலும், தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் வரும் புதன்கிழமை காலை 10.00 மணியளவில் இந்தப் போராட்டம் தொடங்குகிறது. ஏழை எளிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தமிழக மக்களை வஞ்சிக்கும் பாசிச பாஜக அரசின் போக்கை அம்பலப்படுத்தவும், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுடன் இணைந்து பெருந்திரளாகப் பங்கேற்று இந்த அறப்போரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என திமுக தலைமை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
