சீனாவின் புகழ்பெற்ற பாடி பில்டரான வாங் குன் (Wang Kun) தனது 30-வது வயதிலேயே திடீர் மாரடைப்பால் காலமானார். இரும்பு போன்ற உடலமைப்புடன், ஃபிட்னஸ் துறையில் உலகையே வியக்க வைத்த இவர், இதய நோய் காரணமாக உயிரிழந்ததாக அன்ஹுய் மாகாண பாடி பில்டிங் சங்கம் உறுதி செய்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஒரு ‘பௌத்த துறவி’யைப் போலத் தனது ஆசைகளைக் கட்டுப்படுத்தி, மிகக்கடுமையான உடற்பயிற்சிகளையும், அளவான உணவுகளையும் மட்டுமே உட்கொண்டு வந்த இவருக்கு, இவ்வளவு சீக்கிரம் மரணம் நிகழ்ந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தேசிய பாடி பில்டிங் போட்டிகளில் தொடர்ந்து 8 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் வாங் குன். சர்வதேச பாடி பில்டிங் லீக்கிலும் (IFBB) முக்கிய வீரராக இருந்த இவர், ‘மசில் ஃபேக்டரி’ என்ற ஜிம் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
எப்போதும் அவித்த கோழிக்கறி மற்றும் சூப் மட்டுமே உட்கொள்ளும் மிகக்கடுமையான உணவுப் பழக்கத்தைக் கொண்டவர். சமீபகாலமாக, ஆஸ்திரேலியாவின் அஜீஸ் (22 வயது), ஜெர்மனியின் ஜோ லிண்ட்னர் (30 வயது) எனப் இளம் பாடி பில்டர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து வருவது, மிகக்கடுமையான உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டு பயன்பாடு குறித்த அச்சத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.
