ஈரோடு மக்கள் சந்திப்பில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை “தீய சக்தி” என்றும், தனது கட்சியை “தூய சக்தி” என்றும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த அடுக்குமொழி விமர்சனம் குறித்து சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “விஜய்க்கு தீய சக்தி, தூய சக்தி என இப்படி அடுக்கு மொழியில் பேச யாரோ கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், அரசியலில் யார் எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும், இறுதியில் மக்கள் தான் தீர்ப்பு வழங்குவார்கள் என்று தெரிவித்தார். “எது எப்படியாக இருந்தாலும் மக்கள் தான் எதையும் முடிவு செய்வார்கள், அதுவரை நாம் காத்திருப்போம்” என்று கூறிய அவர், விஜய்யின் இந்த ஆக்ரோஷமான விமர்சனங்களை மக்கள் மன்றமே தீர்மானிக்கும் என்று முதிர்ச்சியுடன் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
