வெளிநாடுகளில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதிப்பதும், வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் பலரின் கனவாக இருந்தாலும், அது மனரீதியான நிறைவைத் தருகிறதா என்ற விவாதத்தை ஜெர்மனியில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவரின் பதிவு கிளப்பியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் வசித்து வரும் அவர், அங்கு பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பாக உணர்ந்தாலும், உறவுகளின் அரவணைப்பு மற்றும் சமூகப் பிணைப்பு இல்லாததால் ஏற்படும் தனிமை தன்னை வாட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
“ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டு, அந்தச் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்தாலும், உள்ளுக்குள் ஏதோ ஒரு வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் மீண்டும் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரத்திற்கே குடிபெயரத் திட்டமிட்டுள்ளதாகப் பகிர்ந்துள்ளார்.
சொந்த ஊரில் தடையின்றிப் பேசிக்கொள்ளும் சுதந்திரம், அக்கம்பக்கத்தினரின் அக்கறை மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றை ஐரோப்பிய நாடுகளில் காண்பது கடினம் என்பதை அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். “நாங்கள் நல்ல வருமானம் ஈட்டுகிறோம், வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்; ஆனாலும், இந்தியாவில் கிடைத்த அந்த ஆத்மார்த்தமான பிணைப்பை இங்கு உணர முடியவில்லை” என்று அவர் வெளிப்படுத்தியுள்ள குமுறல், இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு வாழ்க்கையைத் துறந்து, மனநிம்மதிக்காகத் தாய்நாடு திரும்புவது என்ற இவரது முடிவு, புலம்பெயர்ந்து வாழும் பல இந்தியர்களின் தற்போதைய மனநிலையைப் பிரதிபலிப்பதாக சமூக வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
