ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரம்மாண்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பணிகளை நேரில் ஆய்வு செய்த அவர், சுமார் மூன்றே நாட்களில் அதிகாரிகளும் பொதுமக்களும் வியக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். மாநாட்டிற்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 14 ஆம்புலன்ஸ்கள், 58 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் மற்றும் குடிநீர் வசதிக்காக பிரத்யேக லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 60 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 5 ட்ரோன்கள் மூலம் ஒட்டுமொத்தப் பகுதியும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியான கேள்விகளுக்குப் பதிலளித்த செங்கோட்டையன், தற்போதைக்கு மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதே தங்களின் முதல் இலக்கு என்று கூறினார். குறிப்பாக, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தவெகவில் இணைவார்களா என்ற கேள்விக்கு, “தலைவர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ, அதன்படி அனைத்தும் நடக்கும்; பொறுத்திருந்து பாருங்கள்” எனப் பதிலளித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் உள்ளிட்ட சமகால அரசியல் சர்ச்சைகள் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தவிர்த்த அவர், விஜயின் இன்றயை சிறப்புரை தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறைமுகமாக உணர்த்தினார். இந்த அதிரடி ‘டுவிஸ்ட்’ காரணமாக, இன்று மேடையில் விஜய் அறிவிக்கப்போகும் முடிவுகள் குறித்து கட்சியினரிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
