உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மற்றும் ஹத்ராஸ் மாவட்டங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பான கண்காணிப்புப் படக்கருவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜான்சியில் குடியிருப்புப் பகுதி ஒன்றின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் பின்னால் அமர்ந்திருந்தவர் திடீரென இறங்கி ஒரு பெண்ணிடம் மிக மோசமாக அத்துமீறிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இதேபோல் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தரா ராவ் பகுதியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கண்மூடித்தனமாக முகத்தில் அறைந்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான காணொலிகளும் இணையத்தில் பரவி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பதிவான புகார்களின் அடிப்படையில் ஜான்சி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஹத்ராஸ் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களைக் கண்காணிப்புப் படக்கருவி காட்சிகளின் உதவியுடன் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
