உத்தரப் பிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் ஹொரி தவுலத் கிராமத்தில், புர்கா அணியாமல் வெளியே சென்றதாகத் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடூரமாகக் கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பரூக்கி என்பவரது மனைவி தகீரா கடந்த பத்தாம் தேதி புர்கா அணியாமல் வீட்டை விட்டு வெளியே சென்றதால் ஆத்திரமடைந்த பரூக்கி, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியைச் சுட்டுக்கொன்றார்.
அதனைத் தடுக்க வந்த மூத்த மகள் அப்ரீனையும் சுட்டுக்கொன்ற அவர், ஐந்து வயது இளைய மகள் சஹாரீனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் மூன்று பேரின் உடல்களையும் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து மறைத்துள்ளார். மருமகளும் பேத்திகளும் ஐந்து நாட்களாகக் காணவில்லை எனப் பரூக்கியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்தன.
இதைத்தொடர்ந்து பரூக்கியைக் கைது செய்த போலீசார், வீட்டின் தரைதளத்தைத் தோண்டி மூன்று பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெறும் ஆடை விவகாரத்திற்காகத் தன் குடும்பத்தையே ஒருவன் அழித்த இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
