ஆந்திரப் பிரதேசத்தில் கருப்பு நிறம் காரணமாக இளம் பெண் ஒருவர் கணவர் வீட்டில் இருந்து விரட்டப்பட்ட சம்பவம் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் நடுகட்டா கிராமத்தைச் சேர்ந்த கோபிலட்சுமி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் வரை குடும்ப வாழ்க்கை சீராக இருந்ததாக கூறப்படும் நிலையில், சுமார் மூன்று மாதங்கள் கடந்தபின் கோபிலட்சுமிக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் தொடங்கியதாக தெரிகிறது. தனது மனைவி கருப்பு நிறமாக இருப்பதாக கூறி கணவர் அவமதித்து ஒதுக்கியதாகவும், இதற்கு மாமனார் மற்றும் மாமியாரும் துணைநின்றதாகவும் கோபிலட்சுமி புகாரில் தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் போது கோபிலட்சுமியின் குடும்பத்தினர் 25 பவுன் தங்க நகைகளும், ரூ.12 லட்சம் பணமும் வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், கருப்பு நிறம் காரணமாக கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், இறுதியில் மாமியார் வீட்டை விட்டு விரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் மனமுடைந்த கோபிலட்சுமி, தனது கணவர் வீட்டின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையறிந்த கணவர், மாமனார் மற்றும் மாமியார் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோபிலட்சுமி அளித்த புகாரின் பேரில், கணவர் கோடீஸ்வரராவ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.