உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாப்பூர் மாவட்டம் தூப்ஹார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த அந்த மாணவிக்கு, செல்போன் மூலம் 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபருடன் மாணவி தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்ட மாணவியை, வழியில் அந்த வாலிபர் சந்தித்ததாக தெரிகிறது. பின்னர், மாணவியை அழைத்துச் சென்று அவர் கடத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மாலை நேரம் வரை மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில், அடுத்த நாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தியதில், மாணவி அதே பகுதியிலேயே மீட்கப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி அஜய் பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“சார்வா கிராமத்தில் வசிக்கும் ரஞ்சித் பால் (22) என்பவருடன் மாணவிக்கு செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை கடத்திச் சென்ற ரஞ்சித், கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ரஞ்சித்துக்கு எதிராக பாலியல் பலாத்கார வழக்கும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித் பால் பதுங்கி இருந்த நிலையில், போலீசார்  நேற்று  அவரை கைது செய்தனர். பின்னர் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரெண்டு ஓம் வீர் சிங் தெரிவித்தார்.