கன்னட திரையுலகில் துணை நடிகையாக நடித்து வரும் சைத்ரா, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “தர்ஷன் எண்டர்பிரைசஸ்” என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தனை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சைத்ரா தனது குழந்தையுடன் தனியாக பெங்களூருவில் வசித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது மகளை பார்க்க வேண்டும் என்றும், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஹர்ஷவர்தன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சைத்ராவும் அவரது குடும்பத்தினரும் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடும் கோபமடைந்த ஹர்ஷவர்தன், ஒரு சதித் திட்டத்தை உருவாக்கியதாக தெரிகிறது.
அதன்படி, தனது நண்பர் கவுசிக் மூலம் மைசூருவில் ஒரு திரைப்பட படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறி, அதில் நடிக்க வருமாறு சைத்ராவை அழைத்துள்ளார். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சைத்ராவுக்கு முன்பணமாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும், படப்பிடிப்புக்கு காரில் வந்து அழைத்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி நேற்று காலை கவுசிக் காரில் சைத்ராவின் வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் சென்றார். காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென மற்றொரு காரில் வந்த ஹர்ஷவர்தன், சாலையில் நாடகமாடி காரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சைத்ராவை தாக்கி, வலுக்கட்டாயமாக தனது காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சைத்ராவின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்ட ஹர்ஷவர்தன், “என் மகளை என்னிடம் ஒப்படைத்தால் மட்டுமே உங்கள் மகளை பாதுகாப்பாக விடுவிப்பேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சைத்ராவின் தாயார், தனது மற்றொரு மகளிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதன் அடிப்படையில் பேடராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ஹர்ஷவர்தனை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
