மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கந்துவட்டி கொடுமையால் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்து, கடைசியில் தனது சிறுநீரகத்தையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷன் சதாசிவ் என்பவர், விவசாயம் தொடர்ந்து நஷ்டம் அடைந்ததால் மாற்று வருமானத்திற்காக பால் பண்ணை அமைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக, கந்துவட்டி நபர்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கடனுக்கு தினசரி ரூ.10 ஆயிரம் வட்டியாக வசூலிக்கப்பட்டதாகவும், இதனால் வட்டி மட்டுமே பெருகி, ஒரு கட்டத்தில் மொத்த கடன் தொகை ரூ.74 லட்சமாக உயர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடனை அடைக்க முயன்று, தனது 2 ஏக்கர் விவசாய நிலம், டிராக்டர், இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் விற்றுள்ளார். இருப்பினும் கடன் தீரவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கந்துவட்டி கும்பலின் மிரட்டல் தீவிரமடைந்ததாகவும், அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இடைத்தரகர் மூலம் கம்போடியா நாட்டுக்குச் சென்று, தனது ஒரு சிறுநீரகத்தை ரூ.8 லட்சத்துக்கு விற்றதாகவும் ரோஷன் சதாசிவ் வேதனையுடன் தெரிவித்தார். இத்தனை செய்தும் கடன் தீரவில்லை எனக் கூறி, கந்துவட்டி கும்பல் தொடர்ந்து மிரட்டுவதாக கூறிய அவர், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் கொடுத்த பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

தனக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், மும்பையில் உள்ள மந்திராலயா மாநில தலைமை அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் விவசாயிகள் எதிர்கொள்ளும் கடன் சுமை மற்றும் கந்துவட்டி கொடுமையின் கொடூர முகத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.