உத்தரப் பிரதேச மாநிலம் சஹாவ்பூர் கிராமத்தில், 31 வயது பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை, கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். விசாரணையில், சந்தீப் என்பவரின் வீட்டில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது உறுதி செய்யப்பட்டது.
உயிரிழந்தவர் மம்தா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கோரக்பூரைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே திருமணமானவர் என்றும் தெரியவந்துள்ளது. மம்தாவுக்கும் சந்தீப்புக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே சந்தீப்புக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி தற்போது தாய்வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்திற்கு முந்தைய இரவு மம்தா சந்தீப்பின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சந்தீப்பின் பெற்றோரும், அவரது சகோதரிகளும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்று காலை சுமார் 6 மணியளவில், சந்தீப் இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற நேரத்தில், வீட்டில் இருந்தவர்களுக்கும் மம்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகராறு முற்றியதில், வீட்டில் இருந்த கோடரியால் மம்தாவை தாக்கியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய சந்தீப், மம்தா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அருகில் ரத்தக்கறை படிந்த கோடரி கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்த சந்தீப், இந்த கொலையில் தனது பெற்றோர் மற்றும் சகோதரிகள் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியுள்ளார். சம்பவத்துக்குப் பிறகு சந்தீப்பின் பெற்றோரும், அவரது நான்கு சகோதரிகளும் வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
