கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வெங்கடரமணன் (34), உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான வெங்கடரமணன், தனது மனைவி ரூபாவுடன் வசித்து வந்தார். கடந்த 14-ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மனைவி ரூபாவுடன் பைக்கில் அருகிலுள்ள கத்ரிகுப்பே ஜனதா பஜார் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இ.சி.ஜி. பரிசோதனையில், வெங்கடரமணனுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இருப்பினும் அங்கு சிகிச்சை அளிக்கப்படாமல், உடனடியாக ஜெயதேவா இருதய மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முயன்றபோதும், உடனடியாக வாகனம் கிடைக்காததால், தம்பதியினர் மீண்டும் பைக்கில் ஜெயதேவா மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். ஆனால் கதிரேனஹள்ளி பாலம் அருகே சென்றபோது, வெங்கடரமணனுக்கு மீண்டும் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

 

இந்த விபத்தில், வெங்கடரமணன் பைக்குடன் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அவரது மனைவி ரூபா சாலை தடுப்பில் கையடித்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் கணவரை மீட்ட ரூபா, அவரது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக யாரும் உதவ முன்வராதது மனிதாபிமானம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதையடுத்து, ரூபா தனது மைத்துனியான வெங்கடரமணனின் தங்கைக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முதலுதவி அளிக்கும் வகையில் மூச்சுக் காற்று கொடுத்து, நெஞ்சை அழுத்தி உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீண்ட நேரத்துக்குப் பிறகு, ஒரு கார் ஓட்டுநர் உதவ முன்வந்து, மூவரையும் தனது வாகனத்தில் இருதய மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வெங்கடரமணன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட மனைவி ரூபாவும், அவரது தங்கையும் கதறி அழுதது அங்கு நின்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நடுரோட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், உதவி கேட்டபோதும் வாகன ஓட்டிகள் அலட்சியமாக சென்ற காட்சிகள் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் விமர்சனத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் உரிய நேரத்தில் மனிதாபிமான உதவி கிடைத்திருந்தால், ஒரு உயிர் காக்கப்பட்டிருக்கலாம் என்ற வேதனை இந்த சம்பவம் மூலம் வெளிப்பட்டுள்ளது.