ரஷியாவின் கோர்கி–2 கிராமத்தில் உள்ள பள்ளியில், மாணவன் ஒருவர் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த பள்ளியில் பயின்று வந்த திமோதி என்ற 15 வயது மாணவன், கல்வியில் போதிய முன்னேற்றம் இல்லாததாக ஆசிரியரால் கண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை மற்றும் கோபத்தில் இருந்த அவன், சம்பவ நாளன்று கத்தியை பையில் மறைத்து கொண்டு பள்ளிக்கு வந்துள்ளான்.
பள்ளி வளாகத்தில் ஒரு ஆசிரியரிடம் திடீரென “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளான். இதைக் கவனித்த பள்ளி பாதுகாவலர் டிமிட்ரி பாவ்லவ் (32) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார். அவரை கண்டதும், திமோதி தனது பையில் வைத்திருந்த மிளகாய் ஸ்பிரேவை எடுத்து, பாதுகாவலரின் முகத்தில் பீச்சி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த டிமிட்ரியை, கத்தியால் பலமுறை குத்தியுள்ளான்.
மேலும், அதே கட்டிடத்தில் இருந்த சில மாணவர்களையும் திமோதி கத்தியால் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 10 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்த சிறுவனின் உடல் அருகே நின்று திமோதி செல்பி எடுத்துக் கொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சம்பவம் நடந்தவுடன், பள்ளியில் இருந்த பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் வகுப்பறைகளுக்குள் தஞ்சமடைந்தனர். திமோதி அணிந்திருந்த டி-சர்ட்டில் “உயிர்கள் முக்கியமல்ல” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாகவும், முக கவசம் மற்றும் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு வந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ரஷியாவில் பள்ளி வளாகங்களில் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் அரிதானவை என்றாலும், சமீப ஆண்டுகளில் மாணவர்களால் நடத்தப்படும் வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த ஆண்டு தெற்கு ரஷியாவின் செல்யாபின்ஸ்க் நகரில், மாணவன் ஒருவர் சுத்தியலால் தாக்கியதில் நால்வர் காயமடைந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம், பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் தீவிர விவாதத்தை எழுப்பியுள்ளது.
