நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையமைப்பில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம், வெளியான முதல் நான்கு நாட்களில் உலகளவில் 404 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி ரூபாய் வசூல் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இணையதளங்களில் வெளியான எதிர்மறையான கருத்துகளால் இதன் வசூல் பாதிக்கப்பட்டு உலகளவில் மொத்தம் 518 கோடி ரூபாயுடன் முடிவடைந்தது.
சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்துப் பேசிய அஷ்வின், கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்துகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டதாகவும், ஆனால் தான் அதனை இணைய வழியில் பார்த்தபோது ஒரே அமர்வில் முழுமையாகப் பார்க்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு படத்தை முழுமையாகப் பார்க்க முடிகிறதா என்பதையே தான் முக்கியமாகக் கருதுவதாகக் கூறிய அவர், இந்தப் படத்தில் குறைகள் இருக்கலாம் ஆனால் இணையத்தில் சொல்லப்பட்ட அளவிற்கு இது மோசமான படம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இணையத்தில் வரும் விமர்சனங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டோமோ என்ற கேள்வியும் தமக்குள்ளே எழுந்ததாக அவர் கூறியுள்ளார். நடிகர்கள் உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்திற்கு அஷ்வின் அளித்துள்ள இந்த ஆதரவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
