பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், காதலியை ரகசியமாகச் சந்திக்கச் சென்ற பள்ளி ஆசிரியருக்கு, கிராம மக்கள் சேர்ந்து திடீரென திருமணம் முடித்து வைத்துள்ள விநோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தீவிர காதல் இருந்து வந்துள்ளது.

இந்த விஷயம் பெண்ணின் தாயாருக்கும் தெரிந்தே இருந்துள்ளது. இந்நிலையில், காதலிப்பவரை நேரில் சந்திப்பதற்காக ஆசிரியர் ஒருநாள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை கவனித்த கிராம மக்கள், உடனடியாக அவர்களைச் சூழ்ந்து பிடித்து, இரு வீட்டாரையும் வரவழைத்து கிராமத்தின் நடுவே பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Ka Tadka (@viral_ka_tadka)

ஊர் மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட அந்த பஞ்சாயத்தில், இருவரிடமும் திருமணத்திற்கு சம்மதமா என்று கேட்கப்பட்டதற்கு, இருவரும் தங்களது காதலை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் அங்கிருந்த கோவிலில் வைத்து இருவருக்கும் உடனடியாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. மணமகன், மணமகள் மாலை மாற்றிக் கொண்டு, பெண் நெற்றியில் குங்குமம் வைக்கும் இந்தத் திருமண வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணமகன் தரப்பில், “நான் 8 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தேன், ஆனால் கிராம மக்கள் அவசரமாக முடித்துவிட்டனர்” என்று கூறினாலும், இந்த காதல் ஜோடியின் திடீர் திருமணத்தை இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.