அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல விளாகர் (Vlogger) ராகுல் மிஸ்ரா என்பவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை முறையை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், அமெரிக்காவில் சாதாரணமாகக் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்யும் நடுத்தர ஊழியர்கள் நிறுத்தி வைத்துள்ள ஆடி (Audi) உள்ளிட்ட சொகுசு கார்களைச் சுட்டிக்காட்டி, அங்கு இது போன்ற ஆடம்பர கார்களை வாங்குவதற்கு ஒருவர் பெரிய தொழிலதிபராகவோ அல்லது நிறுவனங்களின் உயர் பதவிகளிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒரு சாதாரண ஊழியராக இருந்தால் கூட நல்ல கார், சொந்த வீடு போன்றவற்றை எளிதாக வாங்கி, தங்களது வார இறுதி நாட்களையும் (Weekends) எந்தவித கவலையுமின்றி மகிழ்ச்சியாகக் கழிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் இந்தியாவில் இரவு பகல் பாராமல், தங்களது வார இறுதி நாட்களையும் தியாகம் செய்துவிட்டு மாடாய் உழைக்கும் ஒரு சாதாரண ஊழியரால் இது போன்ற ஒரு சொகுசு வாழ்க்கையை நிஜத்தில் வாழ முடியுமா? என்ற மிகக் காரசாரமான கேள்வியையும் இந்திய சமூகத்தை நோக்கி முன்வைத்துள்ளார்.
இந்திய நடுத்தர வர்க்க ஐடி மற்றும் இதர தனியார் துறை ஊழியர்களின் உழைப்புச் சுரண்டல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலையைத் தோலுரித்துக் காட்டும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோ, தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் லைக்குகளையும், ஆதரவான கருத்துக்களையும் பெற்று இணையத்தில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
