திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கல்வியிற் சிறந்த தமிழ்நாடு” என்று தனக்குத் தானே பாராட்டு விழா நடத்தியச் செலவில், அரசுப் பள்ளிகளின் கட்டுமானத்தைப் பராமரிப்பில் செலவிட்டிருந்தால், இந்தப் பரிதாப உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் சாடியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரைக் குறிவைத்த இபிஎஸ், அவர் இன்னும் ‘ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில்’ இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டுமானங்களால் மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப் பள்ளிகளின் கட்டுமானங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினின் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
