டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், மாசு அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 18) முதல் அமலுக்கு வரும் என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எந்த ஒரு அரசாலும் 9 அல்லது 10 மாதங்களில் காற்று மாசுபாட்டை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. தற்போதைய நிலை குறித்து நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.

மேலும், முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை சுட்டிக்காட்டிய அவர், “அவர்கள் விட்டுச் சென்ற மாசுபாட்டு பிரச்னையை சரிசெய்ய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியைவிட தற்போது நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்,” என்றும் தெரிவித்தார். காற்று மாசை குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது பற்றி அரசு அதிகாரிகள் தெரிவித்ததாவது, வியாழக்கிழமை முதல் டெல்லி முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும், வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் வழங்குவதற்கு முன், செல்லுபடியாகும் PUC சான்றிதழ் உள்ளதா என்பதை கட்டாயமாக சரிபார்க்கப்படும். சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை, வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.