கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராகப் பதவி வகித்த தி.மு.க-வைச் சேர்ந்த ஃபரிதா நவாப், ஆளுங்கட்சி கவுன்சிலர்களாலேயே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக இருந்த ஃபரிதா நவாப் மற்றும் அவரது கணவரும், தி.மு.க முன்னாள் நகரச் செயலாளருமான எஸ்.கே.நவாப் ஆகியோர், டிசம்பர் 15ம் தேதி சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டனர். இவர்களுடன் கிருஷ்ணகிரி நகர தி.மு.க-வைச் சேர்ந்த மேலும் இருபது பொறுப்பாளர்களும் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர்.

ஆளும் தி.மு.க மாவட்டச் செயலாளர் மதியழகனை எதிர்த்ததால் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலே, நகராட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் பதினாறாம் தேதி, தி.மு.க கவுன்சிலர்கள் ஃபரிதா நவாபிற்கு எதிராக நகராட்சி ஆணையரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தனர்.

மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் 27 பேர் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவைத் திரட்டினர். மேலும், அ.தி.மு.க கவுன்சிலர் எம்.நாகஜோதியையும் தங்கள் பக்கம் இழுத்து, நவம்பர் பத்தாம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் தீர்மானத்தைக் கொண்டுவந்து தலைவரை நீக்கினர்.

தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க கவுன்சிலர் நாகஜோதியை, அவரது கட்சி தலைமை நிரந்தரமாக நீக்கியது. தி.மு.க-வில் நகரச் செயலாளராகவும், இஸ்லாமிய சமூக மக்களிடம் செல்வாக்குமிக்கவராகவும் அறியப்பட்ட எஸ்.கே.நவாப், தி.மு.க தலைமையால் கழற்றிவிடப்பட்ட நிலையில், தற்போது தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.