கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், எட்டு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப் பிறகு 6 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கேரள அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அறிவித்தது. இந்தச் சூழலில், நடிகையும், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சு வாரியர் இந்தத் தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் தனது பதிவில், “நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த அந்த மாஸ்டர் மைண்ட் அது யாருடையதாக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது. அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது” என்று வெளிப்படையாகத் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், மஞ்சு வாரியரின் இந்தக் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, பிரபல நடிகரும் இயக்குநருமான அமீர் குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாகப் பதிவிட்டிருந்த அவர், “பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மஞ்சு வாரியர் தெரிவித்த கருத்து, மலையாளத் திரையுலகினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை எழுப்பியிருந்த நிலையில், அமீரின் இந்த ஆதரவு குரல் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம், நீதித்துறை முடிவுகள் மீதான சமூகத்தின் கருத்து வேறுபாடுகளையும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவான குரல்கள் எழுவதின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.