கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுவித்து எர்ணாகுளம் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் திலீப் எட்டாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட நிலையில், முதல் ஆறு குற்றவாளிகளான ஏ1 முதல் ஏ6 வரை உள்ளவர்களுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்காதது குறித்துப் பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தில், நடிகர் திலீப் நடித்த ‘பறக்கும் தளிகா’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டதைக் கண்டித்து, ஒரு பெண் பயணி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், அவரது திரைப்படம் பேருந்தில் ஒளிபரப்பப்பட்டதைக் கண்டித்து அந்தப் பெண் சண்டையிட்டதால், திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், திரைப்படத்தை ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்து வந்த சில ஆண் பயணிகள் கோபமடைந்து, அந்தப் பெண் பயணியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பேருந்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கேரளாவில் நடிகர் திலீப் மீதான வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு மக்கள் மத்தியில் நிலவும் கொந்தளிப்பைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.