மகாராஷ்டிர மாநிலம், கல்யாணில் 26 வயதுப் பெண் பயணி ஒருவரை, ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்து, கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தேஷ் பர்தேஷி (19) என்ற அந்த ஓட்டுநர், பெண்ணைத் தனியாக, இருள் சூழ்ந்த சாலைக்கு அழைத்துச் சென்று, கையைப் பிடித்துத் தவறாக நடந்து கொண்டதாகவும், அவரதுப் பணப்பையைப் பறித்து ₹1000 எடுத்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சத்தம் போடவே, அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து ஓட்டுநரைப் பிடித்துத் தாக்கியுள்ளனர்.

தாக்கப்பட்ட ராபிடோ ஓட்டுநரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்மீது போக்சோ உள்ளிட்டச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 18ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரிடமிருந்து கத்தி மற்றும் ஆசிட் ஸ்ப்ரே ஆகியவை மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம், அனுமதி இன்றிச் செயல்படும் ராபிடோ போன்ற ஆப் அடிப்படையிலான வாகனச் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டரீதியான செயல்பாடுகள் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.