உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சரயோஜினி நகரைச் சேர்ந்த ஆகாஷ் காஷ்யப் என்ற வாலிபர், போதைப்பொருள் பயன்படுத்துவதையும், குற்றப் பின்னணியையும் அறிந்ததால், காதலை முறித்துக்கொண்ட (21) இளம்பெண்ணைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, போதையில் இருந்த அவர், அப்பெண்ணை சரமாரியாகத் தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டி, வீட்டிலிருந்த பொருட்களையும் சூறையாடியுள்ளார்.
குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து 2 முறை சுட்டுள்ளார். இதில் ஒரு குண்டு இளம்பெண்ணின் தோள்பட்டையிலும், மற்றொரு குண்டு கையிலும் பாய்ந்தது. மேலும், இளம்பெண்ணின் 7 வயது மருமகளையும் இந்த கொடூரன் சுட முயன்ற நிலையில், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் காயமடைந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டிவிட்டு, ஆகாஷ் காஷ்யப் காரில் ஏறி தப்பிச் சென்றான்.
பக்கத்து வீட்டார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆகாஷ் காஷ்யப்பைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
