தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், புதுச்சேரியில் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ (LJK) என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, அதன் கொடியை புதன்கிழமை அறிமுகம் செய்தார். நீலம், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்ட கட்சிக் கொடியில், கையில் வேல் ஏந்திய சிங்கம், 6 நட்சத்திரங்கள் மற்றும் நெற்கதிருடன் ‘LJK’ எனப் பதிக்கப்பட்டுள்ளது. கொடி அறிமுக நிகழ்வை முன்னிட்டு மும்மத பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்காளன், சிவசங்கரன், ஜேசிஎம் மக்கள் மன்றத் தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் களத்தில் களமிறங்கியதைப் போன்றே, புதுச்சேரி அரசியலில் ஈடுபட நீண்ட காலமாக ஆர்வம் காட்டி வந்தவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பின் மூலம் சில நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணியிருந்ததால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், 30 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.