கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் கோட்டையாகக் கருதப்படும் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
மொத்தம் 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில், பாஜக 50 வார்டுகளை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது. எல்டிஎஃப் 29 இடங்களிலும், யுடிஎஃப் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு முறை திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியின் எம்.பியாக உள்ள சசி தரூர், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கேரள உள்ளாட்சித் தேர்தல்கள் உண்மையிலேயே அற்புதமான முடிவுகளைத் தந்துள்ளன. மக்களின் ஆணை தெளிவாக உள்ளது. மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாக வெளிப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார். மேலும்,
“பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற யுடிஎஃப்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன் ஒரு வலுவான அரசியல் சமிக்சையாக அமையும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும் பாராட்டிய சசி தரூர், “45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் தவறான ஆட்சிக்கு மாற்றம் வேண்டும் என்று நான் பிரச்சாரம் செய்தேன். இறுதியில், அந்த மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் வேறொரு கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர். அதுவே ஜனநாயகத்தின் அழகு,” எனக் கூறினார். “யுடிஎஃப் ஆக இருந்தாலும் சரி, பாஜக ஆக இருந்தாலும் சரி, மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், நல்லாட்சிக்காகவும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில், எல்டிஎஃப் 52 வார்டுகளையும், பாஜக 35 வார்டுகளையும், யுடிஎஃப் 10 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தது. மேலும் 2015ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக 35 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
