பெங்களூரு கிரிநகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (32) என்ற தொழிலதிபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண்குமார் தனது வீட்டில் மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் எனக் கூறப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று காலை, அந்த கிளி வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின்கம்பத்தில் அமர்ந்தது.
இதையடுத்து, கிளியை மீட்க முயன்ற அருண்குமார், அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, இரும்பு பைப் குழாயின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த இரும்புக் குழாய் மேலே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பியில் பட்டது. இதனால் அருண்குமார் மின்சாரம் தாக்கி, அவர் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அருண்குமார் வாகன எண் தகடு தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
