பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கித்வாய் நகர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது வழிப்பறிக் கொள்ளையர்கள் இருவர் தாக்குதல் நடத்த முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி அளவில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண்ணின் கைப்பையை பறிக்க முயன்றனர். அப்பெண் தன் உடைமைகளை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால், அவர்களில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, கூர்மையான ஆயுதத்தைக் காட்டி மிரட்ட முயன்றார்.

 

ஆனாலும், பையைப் பிடித்திருந்த பெண் அருகிலிருந்த நிறுத்தப்பட்டிருந்த காருக்குப் பின்னால் சென்று மறைந்து கொள்ள, மற்றொரு வயதான பெண்மணியோ திருடனுக்கு எதிரே துணிச்சலாக நின்று கொள்ளையர்களை மிரட்டினார். மக்கள் கூடிவிடுவார்கள் என்ற பயத்தில், அந்த 2 கொள்ளையர்களும் தங்கள் முயற்சியைக் கைவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பெண்கள் காட்டிய துணிச்சலைப் பாராட்டும் அதே வேளையில், இந்தச் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.