இந்தியாவின் சுமார் 75 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்க பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது எனக் கூறி, அதனை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத், நீதிபதி சந்தீப் மெஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், “முன்னதாக டெல்லி மட்டுமே அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதியாக கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், இந்தியாவின் சுமார் 75 சதவீத நிலப்பரப்புக்கு நிலநடுக்க அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது” என வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், “அப்படியென்றால் அனைவரையும் நிலவுக்கு அனுப்பி விட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டியது. இதற்கு நீதிபதிகள், “இந்த நாட்டில் முதலில் எரிமலைகளை கொண்டு வர வேண்டும். அதன் பிறகு ஜப்பானுடன் ஒப்பீடு செய்யலாம்” எனக் குறிப்பிட்டனர்.
மேலும், எதிர்காலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்புகளை கட்டுப்படுத்த முன்தயாரிப்புகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு,
“அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கமே கவனித்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் எதையும் செய்ய முடியாது” என தெரிவித்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து, அந்த பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
