சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் பதிவான மாநிலங்களில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) செயல்படுத்தி வரும் தேசியப் புற்றுநோய் பதிவேட்டுத் திட்டத்தின் (National Cancer Registry Programme) மதிப்பீடுகளின் அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவான புதிய புற்றுநோய் பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு இந்திய அளவில் 14,61,427 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவான நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 93,536 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அளவில் 14,96,972 ஆக உயர்ந்த நிலையில், தமிழ்நாட்டில் 95,944 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு பதிவானது. கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய அளவில் புற்றுநோய் பாதிப்பு 15,33,055 ஆக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 98,386 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம், 2024 ஆம் ஆண்டில் சுமார் 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் பாதிப்புகளுடன், நாட்டில் அதிக பாதிப்புகள் பதிவான மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருப்பது உறுதியாகியுள்ளது. புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்களாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், புகையிலை பயன்பாடு மற்றும் மது அருந்துதல், போதுமான உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல் ஆகியவை புற்றுநோய் பாதிப்புகளுக்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NPCDCS) கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நிலைப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆதரவு வழங்கி வருகிறது. மேலும், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு நாடு முழுவதும் உலகளாவிய புற்றுநோய் ஸ்கிரீனிங் (Cancer Screening) மேற்கொள்ளும் பிரச்சாரத்தையும் சுகாதார அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.