சையத் முஷ்தாக் அலி டிராபி 2025 போட்டிகளில் ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நான்கு வீரர்களை இடைநீக்கம் செய்து அசாம் கிரிக்கெட் சங்கம் (ACA) நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அமித் சின்ஹா, இஷான் அகமது, அமன் திரிபாதி மற்றும் அபிஷேக் தாக்குரி ஆகிய வீரர்கள் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகம் எழுந்ததை அடுத்து, இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நால்வரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, மாநில காவல்துறையின் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நான்கு வீரர்களுக்கும் எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையத் முஷ்தாக் அலி டிராபி போட்டிகளில் பங்கேற்ற அணியின் சில வீரர்களையும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முயற்சி செய்ததாகவும், தவறான செயல்களுக்கு தூண்டியதாகவும் இவர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது குறித்து அசாம் கிரிக்கெட் சங்கச் செயலாளர் சனாதன் தாஸ் கூறியதாவது:
“குற்றச்சாட்டுகள் வெளிவந்ததும், பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. அதே நேரத்தில் ACA சார்பிலும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விளையாட்டின் நேர்மையை பாதிக்கும் வகையில் கடுமையான தவறுகளில் இவர்கள் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்கில் இவர்களை இடைநீக்கம் செய்துள்ளோம்,” என்றார்.
இடைநீக்கக் காலத்தில், இந்த நால்வரும் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடுவர், பயிற்சியாளர், அம்பயர், மேட்ச் ரெஃபரி உள்ளிட்ட எந்தவிதமான கிரிக்கெட் தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த, அனைத்து மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிளப்புகள் மற்றும் கிரிக்கெட் அகாடமிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்குமாறும் அசாம் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
