உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா 2023-ல் சீனாவை முந்தியது. இதற்குக் காரணம், சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதே ஆகும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1980 முதல் 2015 வரை ஒரு குழந்தை கொள்கையைச் சீனா கடைப்பிடித்தது. பின்னர், குழந்தை பிறப்பு விகிதம் குறைந்ததால், அதை ஊக்குவிக்க 2015-ல் இரு குழந்தைகள் மற்றும் 2021-ல் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து பல்வேறு சலுகைகளையும் அரசு அறிவித்தது.
எனினும், இவற்றால் எந்தப் பலனும் இல்லாமல் ஆண்டுதோறும் குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து, முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சீன அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு நீக்கப்பட்டு, பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்படும் 13% மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட உள்ளது.
கருத்தடைச் சாதனங்களின் விலை உயர்வது, திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும் எனச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வரி விதிப்பு குறித்துச் சீன சமூக ஊடகங்களில் விவாதம் கிளம்பியுள்ளது. ஆணுறை வாங்குவதை விடக் குழந்தைகளை வளர்க்கும் செலவு அதிகமாக இருக்கும் என்று மக்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
