இன்றைய சமூக ஊடக யுகத்தில் அதிக விருப்பங்கள் மற்றும் பின்தொடர்பவர்களைப் பெற வேண்டும் என்ற மோகத்தில், விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல், இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான சாகசங்களைச் செய்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த வகையில், இளைஞர் ஒருவர் ஓட்டும் டிராக்டரில் இருக்கும் மற்றொருவர் கையை, பெரிய சக்கரத்தின் அடியில் வைத்து சாகசம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

டிராக்டரின் சக்கரத்தை ஒருவரின் கையின் மீது ஏற்றி இறக்கும் போது, எந்த காயமும் இல்லாமல் அவர் சிரிக்கும் காட்சி காண்போரைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இதுபோன்ற விபரீத சாகசங்களில் கைகள் நசுங்கி கடுமையான காயம் ஏற்படுவதுடன், உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இந்தக் காணொளியை, எக்ஸ் தளத்தில் ஒரு கணக்கு பகிர்ந்துள்ளதுடன், “ரீல்ஸுக்காக உயிரைப் பணயம் வைக்கும் மோகம் அதிகரித்து வருகிறது. ஒரு தவறு நேர்ந்தால் கூட வாழ்க்கை முடிந்துவிடும். நம்முடைய தைரியத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு விருப்பத்திற்காக உங்கள் அன்புக்குரியவர்களை அழவைக்காதீர்கள்” என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளது.

 

நூற்றுக்கணக்கான விருப்பங்களையும் எதிர்வினைகளையும் பெற்றுள்ள இக்காணொளி குறித்துப் பலரும், “ஒரு நாள் இந்த தைரியம் என்னுடைய கையை காவு வாங்கும்” என்றும், “இது மிகவும் ஆபத்தானது. இத்தகைய சாகசங்களை முயற்சி செய்யக் கூடாது; இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.