புதுச்சேரி வில்லியனூர் அருகே செந்தாமரை நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி (40), தனது 11-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். கணவர் பரத்ராஜ் உடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால், 2020-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். மகளை பள்ளியில் சேர்த்தும், பள்ளி முடிந்ததும் அழைத்தும் வருவது தமிழ்செல்வியின் வழக்கம்.

ஆனால் இந்த மாதம் 5-ஆம் தேதி, பள்ளிக்கு சென்ற மகளை வீட்டுக்கு அழைக்க தமிழ்செல்வி செல்லாததால் பள்ளி நிர்வாகம் அவரது தம்பி மதன்ராஜிடம் தகவல் தெரிவித்தது. மதன்ராஜ், மாணவியை வீட்டிற்குக் கொண்டுவந்தபோது தமிழ்செல்வி காணாமல் போனது தெரிந்தது. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் வில்லியனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின்படி தமிழ்செல்வியின் செல்போன் சிம் விவரங்களை ஆய்வு செய்த போலீசார், ஒதியம்பட்டு ரங்கசாமி நகரைச் சேர்ந்த பர்னிச்சர் கடைக்காரர் அய்யப்பன் (40) அடிக்கடி அவரிடம் பேசியது தெரியவந்தது. அவரை விசாரணைக்காக அழைத்த போலீசாருக்கு அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்—தமிழ்செல்வியை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்களின் படி, சில மாதங்களுக்கு முன்பு கோம்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் தமிழ்செல்விக்கு அய்யப்பன் அறிமுகமானார். பின்னர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. விவாகரத்து பெற்றவர் என்று அறிந்த அய்யப்பன், தமிழ்செல்வியுடன் நெருக்கமாக பழகினார். குடும்பச் செலவுக்காக தமிழ்செல்வி அவ்வப்போது அவரிடம் பணம் பெற்றதாகவும், சமீபத்தில் ரூ.1.5 லட்சம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த பணத்தகராறு தொடர்பாக இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சம்பவ நாள், மகளை பள்ளியில் விட்டுவிட்டு தமிழ்செல்வி அய்யப்பன் கடைக்கு சென்றபோது, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தமிழ்செல்வியை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கொலை வெளியில் தெரிந்தால் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில், உடலை சாக்கு மூட்டையில் திணித்து கடையில் மறைத்து வைத்தார். பின்னர் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில், சாக்கு மூட்டையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி விழுப்புரம்–நாகை நான்கு வழிச்சாலையோரம் உள்ள குடுவையாற்றின் வாய்க்காலில் வீசியுள்ளார்.

அய்யப்பன் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, போலீசார் அவரின் உடல் வீசப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர். வாய்க்காலில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்கும்போது துர்நாற்றம் வீசியது. மூட்டையை திறந்தபோது அழுகிய நிலையில் தமிழ்செல்வி உடல் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், சம்பவ இடத்தில் திரண்ட தமிழ்செல்வியின் உறவினர்கள் அய்யப்பனை சூழ்ந்து தாக்க முயன்றதை போலீசார் தடுத்து, அவரை பாதுகாப்பாக வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அய்யப்பனுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு, விழுப்புரம் வானூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட அவர், அந்தப் பெண்ணையும் கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். ஜாமீனில் வெளியே வந்த பின்னர் மீண்டும் தமிழ்செல்வியைத் தொடர்பு கொண்டு, அவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தமிழ்செல்வி மாயமான வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு, அய்யப்பனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடூரமான இந்த இரண்டாவது கொலை சம்பவம் புதுச்சேரி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.