சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தங்களது எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, போஸ்டர் யுத்தங்கள் மற்றும் கருத்து மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகையை முன்னிட்டு, கோவை மாநகரில் தி.மு.க.-வினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த போஸ்டர் யுத்தம், தமிழக அரசியலில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

​கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளான உக்கடம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் போஸ்டரின் மைய வாசகம், “எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டில் குஸ்கா தான்” என்பதுதான். இந்த போஸ்டரில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளன. தேர்தலை நோக்கி அரசியல் காய் நகர்த்தப்படும் இச்சமயத்தில், மத்திய உள்துறை அமைச்சரை நேரடியாக விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்களுக்கு, பா.ஜ.க. மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.