திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் கல்நாட்டான்பட்டி, சீவல் சரக்கு நெசவாளர் காலனி, அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம் மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பகுதி நேரம் ரேஷன் கடைகளைத் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வலியுறுத்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், பொங்கல் பரிசு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் முடிவெடுப்பார் என்றும், மக்களுக்குத் தேவையான அனைத்தையும் முதல்வர் சரியாகச் செய்வார் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசியதை மறுத்த அமைச்சர், அதிமுக போட்டியிட 210 தொகுதிகள் எங்கே உள்ளன, அதிகபட்சம் 24 தொகுதிகளை வேண்டுமானால் அவர்கள் பெற முடியும் எனக் கிண்டலாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கி மேம்படுத்தி வருவதாகவும், ஏழை மக்களுக்கு சுமார் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 20 ஆண்டுகளாகப் பழுது நீக்கப்படாமல் இருந்த 1.25 லட்சம் வீடுகளுக்கு ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கிப் பழுதுபார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு சட்டமன்றத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாகக் கூறினார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிரந்தரமானது என்றும், முதலில் 1 கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், விடுபட்ட தகுதியுள்ள அனைவருக்கும் மீண்டும் வழங்கப்படும் எனக் கூறி, நாளை மாலை முதல் கூடுதலாக 25 லட்சம் பேருக்கு (மொத்தம் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேருக்கு) இந்த உரிமைத் தொகை வீடு தேடிப் பணம் வரும் என்றும் அமைச்சர் ஐ. பெரியசாமி நம்பிக்கை தெரிவித்தார்.